சோழர்களும் அவர்களின் வரலாறும்-01
சோழர்களின் தோற்றம் என்பது காவிரியாற்றின் கரையோர பகுதிகளிலும் அவற்றின் கிளையாற்றுப் பிரிவுகளின் அருகாமையிலும் உருவாகியது என்கின்றது வரலாறு. சோழர்களைப் பொறுத்த மட்டில் கரிகால சோழன், இளஞ்செட்சென்னி சோழன் போன்ற கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த சோழமன்னர்களால் சோழர் குலம் பெருமை எய்தி காணப்பட்ட போதும் கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் வந்த சோழ மன்னர்கள் சிற்றரசர்கள் எனும் நிலைக்கு தாழ்ந்து போயினர்.
கரிகாலன் காலத்து சோழர் ராஜ்ஜியம் கி.பி 120
பிற்காலத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டளவில் மீண்டும் சோழர்கள் வலிமைபெற்று விளங்கத் தொடங்கினர்.வரலாற்று ஆய்வாளர்களைப் பொருத்தமட்டில் கி.பி 2 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு முந்தைய காலப் பகுதிகளிலும் வாழ்ந்த சோழர்கள் முற்காலச் சோழர்கள் என்றும் கி.பி 9 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு பின்னருமான காலப் பகுதிகளில் வாழ்ந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்றும் இனம் காணப் படுகின்றார்கள்.
வரலாற்று சான்றும் சோழர் எனும் பெயர் விளக்கமும்
கிறிஸ்துவுக்கு முன்வாழ்ந்த சோழர்களின் பெயர்களை இலகியம்களும் நூல்களும் கூறினாலும் சோழர்களின் தோற்றத்தையும் அதன் காலப் பகுதியையும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்ள போதிய வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றே கூற வேண்டும். இருந்தாலும் சங்க கால இலக்கியம்களில் இருந்தும் பிற பல வரலாற்று நூல்களில் இருந்தும், கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்களில் இருந்தும் கிறிஸ்துவுக்கு பின் வாழ்ந்தசோழ மன்னர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆட்சி காலப் பகுதிகளும் அறியப் படுகின்றன. மேலும் இலங்கையின் மகாவம்சம், தொலமி எனும் புவியியல் ஆராட்சி நிபுணரின் குறிப்புகள், 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அலெக்ஸ்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் வழிகாட்டி நூலான " PERIPLUS OF THE ERYTHRAEAN SEA " போன்ற சான்றுகளும் சோழர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலப் பகுதியையும் தெளிவாக அறிய உதவுகின்றன.
சோழர்கள் எனும் பெயர் உருவானது எப்படி என்று பலர் பல விதமாக தங்கள் கருத்தை முன் வைத்தாலும் தேவநேயப் பாவாணர் மற்றும் பரிமேலழகர் என்பவர்களின் கருத்துக்களே குறிப்பாக நோக்கப் படுகின்றன. நெல் மிகையாக விளையும் நாடு சோழநாடு என்றும் நெல்லின் மறு பெயரான "சொல்" என்பதே மொழிப் பாவனையால் திரிபுற்று "சோழ" என்று மருவிற்று என்பது தேவநேயப் பாவாணர் கருத்தாகும். பரிமேலழகரை பொறுத்த வரையில் பாண்டியர் குலம்,சேரர் குலம் போன்று சோழர்களும் ஒரு ஆண்டு வந்த குலப் பெயர் ஆகும் என்பது அவரின் கருத்தாகும்.
சோழர்களும் அவர்களின் வரலாறும்-02
(இதன் முதல்பதிவைப் பார்ப்பதற்கு சோழர்களும் அவர்களின் வரலாறும்-01 )
புலிக்கொடியே சோழர்களின் கொடியாக அறியப்பட்டது என்பதைக் கூறும் சங்ககால நூல்களும் இலக்கியங்களும் அதின் தோற்றம் பற்றி குறிப்பிடவில்லை.சோழர்கள் சூடும் பூவாக அத்தியே காணப்பட்டது.
கரிகாலன் காலத்திலும் அதற்க்கு முன்னைய காலப் பகுதிகளிலும் அதாவது கி பி 2 ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலப் பகுதிகளில் சோழர்களின் தலை நகராகத் விளங்கியது உறையூராகும் அகழிகளாலும் ,கோட்டை மதில்களாலும் சூழப்பட்ட அழகிய நகரான இது காவிரிப் பூம்பட்டினதிற்க்கும் காவிரி கழி முகத்திட்க்கும் அருகாமையில் அமைந்திருந்த துறைமுக நகர் என அறியப்படுகின்றது.தொலமியின் காலப் பகுதிகளிலேயே சோழநாட்டின் முக்கியத்துவம் மிக்க இரு பெரும் துறைமுக நகரங்களாக காவிரிப் பூம்பட்டினமும் , நாகப் பட்டினமும் காணப்பட்டன. இவ்விரு நகர்களும் வணிக மையங்களாக திகழ்ந்ததுடன் ரோமர்களின் கப்பட் போக்குவரத்தும் நடை பெற்றது என்பது கிறிஸ்துவின் தொடக்கக் காலங்களில் பயன்படுத்தப்பட்ட ரோம நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டதன் மூலம் உறுதிப் படுத்தப்படுகின்றது.
தமிழகத்தில் கிடைக்கப்பெற்ற ரோம நாணயங்கள் சில
மேலும் பொன்னியாறு எனப்படும் காவிரியாற்றையும் அதன் கிளையாருகளையும் சார்ந்து சோழர்கள் வசித்த போது சோழநாடு பொன்னி நாடு என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறு. காவிரி நீர் பெருக்கெடுக்கும் போது எடுக்கப் படும் விழாக்கள் சோழர்களிடம் முக்கியத்துவம் பெற்றும் காணப்பட்டது.
சோழர்களின் தலைநகரங்களில் சிறப்பும் முக்கியத்துவமும் பெற்றது தஞ்சையாகும். விஜயாலய சோழன் தஞ்சையை தன் தலைநகரமாய் தேர்ந்தெடுத்து பல வெற்றிகள் பெற்றான் என்பது வரலாறு. கி பி 9 -கி பி 11 ஆம் நூற்றாண்டுவரை சிறந்த தலைநகராய் விளங்கியது. தஞ்சைக் காலத்திலேயே உலகப் புகழ்பெற்றதும் , யுனெஸ்கோவால் உலகப்பாரம்பரிய கலாசாரம் சார்பான சின்னமாக அறிவிக்கப்பட்டதும் ஆன தஞ்சைப் பெரும் கோவில் இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
தஞ்சைப் பெரும் கோவில்
தஞ்சையை தலைநகராய் கொண்ட சோழர்கள் பல்லவ நாட்டை கைப்பற்றிய பிற்பாடு இரண்டாம் தலைநகராக காஞ்சியையும் தம்பால் கொண்டு அவ்வப்போது அங்கிருந்தபடியும்ஆட்சி பொறுப்புக்களை நிர்மாணித்து வந்தனர். காலப் போக்கில் தஞ்சையிலிருந்து தம் தலைநகரை கங்காபுரி எனப்படும் கங்கைகொண்ட சோழபுறத்திற்கு இராஜராஜனின் மகன் முதலாம் இராஜேந்திரனால் மாற்றிக் கொண்டார்கள். கி பி 11 - கி பி 13 ஆம் நூற்றாண்டுவரை சோழகங்கம் எனும் அழகிய ஏரியை கொண்ட இந்த நகரம் தலைநகரமாக சிறந்து விளங்கியது.மேலும் சாளுக்கிய சோழர்களின் காலத்தில் சிதம்பரம், மதுரை, காஞ்சிபுரம் ஆகியதையும் சோழ மண்டலங்களாக கொண்டு ஆட்சி புரிந்தனர் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியப் படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம்
சோழர்கள் பற்றிய மேலும் சுவாரசியமான தகவல்களுடனும் ஒவ்வொரு சோழர் பற்றியும் விரிவாயும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றியும் விரிவாகக் காண்போம்
சோழர்களும் அவர்களின் வரலாறும்-03
(இதன் முதல் பகுதியைப்பர்ப்பதற்கு சோழர்களும் அவர்களின் வரலாறும்-02 )
சோழர்களின் தோற்றம்
சோழர்களின் தோற்றம் என்பது எவ்வாறு ஏற்பட்டது என்பதில் பல குழப்பங்கள் இருந்தாலும் மூவேந்தர்களில் மூத்தகுடி பாண்டியர்கள் என்பதில் ஐயுறவு இல்லை. தமிழனினதும் தமிழினதும் பிறப்பிடமான குமரிக்கண்டம் பாண்டிநாடு என்னும் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டது [ குமரிக்கண்டம் குறித்து சில எதிர் வாதங்களும் உள்ளன ஆனால் தமிழ் சங்ககால நூல்கள் குமரிக்கண்டம் இருந்ததாயும் பாண்டியர் ஆண்டதாயும் குறிப்பிடுகின்றன எது எப்படியோ முதலில் தோற்றம் பெற்ற தமிழ் மன்னர்கள் பாண்டியர்கள் என்பது தெளிவு]. முற்கால மாந்தரில் மக்களை ஒழுங்கமைத்தவர்களாயும் மக்களின் தலைவர்களாயும் இருந்த பாண்டியர்களின் குடியினர் மன்னர் ஆட்சி தோன்றியபோது அரசர்களாயும் மாறிப் போயினர். காலசுழட்சியால் மக்களின் பெருகினபங்கினரின் பரந்த வாழ்கையை தனி ஆட்சியின் கீழ் கவனிப்பதில் சிரமுற்ற பாண்டியர்கள் தம் அரசின் கீழ் பாகத்தையும் ,மேல் பாகத்தையும் பிரித்து மண்டிலத் தலைவராகவோ அல்லது துணையரசராகவோ ஆளும்படி பணிக்கப்பட்ட பாண்டிய அரசமரபினரே காலத்தின் மாற்றத்தால் சேரர்களாயும் , சோழர்களாயும் மாறிப் போயிரல் வேண்டும் என்பது பலரால் முன்வைக்கப்படும் கருத்து. எது எப்படியோ கடலோடு மூழ்கிப்போன குமரிநாடு ஆதாரங்களையும் சான்றுகளையும் தன்னோடு கொண்டு மூழ்கிவிட்டது என்பதே வெளிச்சம்.
குமரிக்கண்டம்
சோழப்பேரரசின் கீழ் வாழ்ந்த ஆட்சிப்பிரிவுகளும் மக்களும் சோழர்கள் எனும் பெயராலேயே இனம் காணப்பட்டனர்.காரணம் பொதுமக்களின் துணைகொண்டே படைவீரர்கள் இடம் பெற்றதாலும் பேரரசுகளின் கீழ் சிற்றரசுகள் இடம் பெற்றதினாலும் மக்களுக்கும் அரசிற்கும் இருந்த தொடர்புகள் காரணமாயும் மக்கள்களும் சோழர்கள் என்னும் பெயர்கொண்டே விளிக்கப்பட்டனர். வளமான நாடுகளுக்கு மன்னர்கள் என்பதை குறிக்கும் பொருட்டு "வளவர்கள்" எனும் பெயரும்,உறையூரை தலைநகராய் கொண்டு ஆண்டவர்களாதலால் உறையூரின் மறு பெயரான கோழி எனும் பெயர் குறித்து "கோழி வேந்தர்கள்" என்றும் சிபி எனும் செம்பியன் சோழன் பருந்து துரத்திய புறாவிட்க்கு பதிலாய் தன் தசையை கொடுத்துதவியதால் "செம்பியன்" என்னும் பெயர்கள் அவர்கள் குலப் பெயர்களாய் விளங்கியதுடன் அவர்களின் பெயர்களின் பின்னும் இணைந்து கொண்டது.மற்றும் பரகேசரி,இராஜகேசரி என்னும் பட்டங்களை மாறிமாறி புனைந்தபடி முடியேறுவதும் அவர்கள் வழக்கமாய் இருந்தது.
அரசுரிமையும் ஆட்சியமைப்பும்
அக்கால வழக்கின் படி மன்னனின் மூத்த புத்திரனுக்கே நாடாளும் உரிமை இருந்தது.வம்சாவழி இல்லாவிடத்து மன்னர்களின் சகோதரர்களும் முடியேறியதுடன் சில சமயங்களில் பெண்வழி வந்த வாரிசுகளும் முடி சூடிக்கொண்டனர். நேரடி வாரிசல்லாதவ்ர்கள் முடியேந்தும் போது அமைச்சரவையின் கருத்தும் மக்கள் கருத்தும் எதிர் பார்க்கப் பட்டன. மேலும் மக்களவை ,அமைச்சரவை என்பனவற்றின் கருத்துக்கள் எதிர்பார்க்கப்பட்டது ஜனநாயகத்தன்மையை எடுத்துக் காட்டினாலும் மன்னனே சர்வ அதிகாரங்களையும் பெற்றவனாகவும் மன்னனின் முடிவே அறுதியானதாயும் இருந்தது. மன்னன் வாழும் காலத்திலேயே அடுத்த அரசன் யாரென தீர்மானிக்கப்படுவதால் வாரிசுகளுக்கான குழப்பங்கள் குறைவாக இருந்தன. சூழ்ச்சிகளும் அபகரிப்புக்களும் நடக்கவில்லை என்று சொல்வதற்கும் இல்லை. ஆட்சியமைப்பை பொறுத்தவரையில் பேரரசின் கீழ் சிற்றரசுகளும் அவர்களின் கீழ் பிரதானிகளும் எனும் வகையில் நாடு பல உபபிரிவுகளாக பிரிக்கபட்டதன் மூலம் அரசு சீர்பேணப்பட்டது. எதிரி நாடொன்றை கைப்பற்றியபின் மன்னரின் புதல்வர்களில் ஒருவன் அல்லது மன்னனின் நம்பிக்கைக்குரிய ஒருவனே அங்கு அரசனாக அமர்த்தப்பட்டான்.
பிற்காலச்சோழர்கள் மற்றும் சாளுக்கிய சோழர்கள்
இளம்சேட்சென்னி சோழன்
கங்கைகொண்ட சோழபுரத்தின் நந்தி
கிமு 3 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவனாதலால் முற்காலச்சோழருள் அடங்கும் இவனே புகழ்பெற்ற கரிகாலசோழனின் தந்தையாயும் கொள்ளப்படுகின்றான். இவன்பற்றியறிய உதவும் சங்ககால நூல்களும் புறநானூறு அகநாறு போன்றனவும் இவனை போர்நுட்பங்களில் யானைப்படை, குதிரைப்படை போன்றன உடையவனும் தானகாரியங்களில் சிறந்தவன் என்றும் கூறுகின்றன.
சோழர்களும் அவர்களின் வரலாறும்-04
பழந்தமிழ் நாட்டை ஆண்ட மூன்று மாபெரும் அரசர்களில் அவரவர்கள் ஆண்ட நாடு அவர்களின் பெயரைக்கொண்டு மண்டலம் என்று சிறப்புற அழைக்கப்பட்டது. அந்த வகையில் சோழ மண்டலம் கிழக்கே உள்ள நாடு என்று பொருள் படும் வகையில் குணபுலம் என்றும்
அழைக்கப்பட்டது என்பது கல்வெட்டு மற்றும் சங்க இலக்கியங்களில் இருந்து
அறிய வருகின்றது. சோழ நாடு காவிரியாற்றையும் அதன் கிளையாறுகளான
கொள்ளிடம்,அரசிலாறு, முடிகொண்டான் ஆறு,வடவாறு,வெண்ணாறு,வெட்டாறு போன்ற
ஆறுகளையும் தன்னகத்தே கொண்டு அமைந்ததால் நீர் வளத்திலும், விவசாயத்திலும்
சோழநாடே மற்ற நாடுகளை காட்டிலும் முன்னிலையில் நின்றது எனலாம். ".........சோழவளநாடு சோறுடைத்து..........",மற்றும் "தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே "
போன்ற பழந்தமிழ் பாடல்களில் இருந்து சோழநாட்டின் செல்வச்செழிப்பு
அறியத்தகும். சோழ நாடு வளமான நாடு மற்றும் நீர் வளம் கூடிய நாடு என்பதால்
தான் வளநாடு,புனல் நாடு என்றும் சோழர்கள் வளவர்கள் ,நீர்நாடன் என்றும் அழைக்கப்பட்டதுடன் சென்னி,கிள்ளி எனவும் அழைக்கப்பட்டனர்.
சூரியனை குல முதலாக கொண்ட சோழர்கள் சூரிய வம்சத்தினராய் சங்க கால இலக்கியங்கள் முதல் கல்வெட்டுக்கள் வரை உள்ள தகவல்கள் மூலமும் "செங்கதிர்ச்செல்வன் திருக்குலம்............"
எனும் வரிகளின் மூலமும் இனம் காணப்படுகின்றனர். மேலும் சில சோழர்
வரலாறு கூறும் புத்தகங்கள் வைவச்சுதமனு வம்சத்தில் தோன்றிய சூரிய
வம்சதினனான இகஷ்வாகுவும் அவன் வழித்தோன்றலான முசுகுந்தனும் இவன் மகனான
வல்லபனும் அவன் வழியில் சிபியும் இவன் வம்சாவழியும் சூரிய வம்சத்தினரே
என்பதால் சோழர்களும் சூரிய மரபினராகின்றனர் என்கின்றன. பிற சில புத்தகங்கள்
சோழர்கள் திருமால் ,பிரம்மா வழியில் சூரியனையும் குலமுதலாய் கொண்டனர்
என்கின்றது.
மேலும் முற்காலச்சோழர் பற்றிநாம்
பார்ப்பதானால் அவர்களை சங்க காலத்திற்கு முந்திய சோழர் என்றும் சங்ககாலச்
சோழர் என்றும் பகுத்தல் தகும்.
சங்க காலத்திற்கு முந்திய சோழர்கள்
இவர்களை பற்றி நிச்சயமாக வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிய முடியாது. ஆனால்
சங்க இலக்கியங்களும் பனுவல்களும் ,கல்வெட்டுக்களும் பல சோழ வேந்தர்களின்
பெயர்களை செப்பனிடுகின்றன. அவர்கள் எல்லோரின் பெயரையும் இங்கு தர
முடியாவிட்டாலும் சிலரின் பெயரையும் அவர் கொண்ட வரலாற்றையும் தர
முயல்கின்றேன். மனுச்சோழனை முனிட்டு தந்தை வழி தனயன் மரபாய் தொடரும் சோழர்
குலத்தில் இட்சுவாகு,விகுக்சி,ககுத்தன்,காக்சீவதன்,சூரியமன்,அநலப்பிரதாபன்,
வேனன்,பிரீது,துந்துமாறன்,யுவனாசுவன்,மாந்தாதா,முசுகுந்தன், வல்லபன்,
பிரிதுலாக்கன்,பார்த்திபசூடாமணி, தீர்க்கபாகு,சந்திரசித்தன், சங்கிருதி,
பஞ்சபன்,சகரன்,சத்தியவிரதன்,உசீநரன்,சிபி, என்று அறியலாம். [பிற சிலர் சிபியைத்தொடந்து மருத்தன் தொடக்கி இராம லட்சுமணர் வரை இனம் காண்பர், கவனிக்க இராமனும் சூரிய குலத்தவனே] இச்சிபியை அடுத்து வந்த மன்னர்களாக சோழன்,இராஜகேசரி,பரகேசரி,இராஜேந்திரஜித்து போன்றோரும் சொல்லப்படுகின்றனர்.
மனு - நீதிதவறாத மன்னனாக இலக்கியங்களிலும் பனுவல்களிலும்
காட்டப்படுகின்றான்.
சிபி-புறாவிட்காக தன்தசையை அறுத்துகொடுத்தவன் என்றும்
நீதிவளுவாதவன் என்றும் தெரியப்படுகின்றான். இவன் மக்களும்
சந்தாதியினரும் செம்பியன்கள் எனப்பட்டனர்.
இராஜேந்திரன்- "முதுமக்கட்சாடி" வழக்கத்தினை ஊக்குவித்தவன் எனலாம்.
கவேரன்-காவிரியின் பாய்ச்சலை சோழ நாட்டிற்க்கு உருவாக்கி
கொடுத்தவன்.
புட்பகேது- இவன் வானவூர்தி கொண்டவன் எனபடுகின்றான்.
சமுத்திரஜித்-பாக்குநீரினைப்பை உருவாக்கியதன் சான்று வணிகத்திற்கும்
கப்பல் போக்கிற்கும் உந்துதல் அளித்தவன்.
தொடித்தோட் செம்பியன்-பறக்கும் அசுரகோட்டைகளை அழித்தவன்.
வசு- இவனும் வானவூர்தி தொடர்புள்ளவன் எனபடுகின்றான்.
பெருநட்கிள்ளி-பொறியியல் மருத்துவ கலைகளில் தேர்ந்தவன்.
இளஞ்சேட்சென்னி-அதிவேகமான தேர்களை செலுத்தும் திறமை உடையவன்.
இங்கு சோழர் பற்றிய நூல்களும் குறிப்புக்களும் வானூர்தி பற்றி குறிபிடுகின்றன ஆனால் இதுபற்றி என்னால் விளக்கமாக அறிய இயலவில்லை. அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும் இல்லாவிடில் நான் தேடி அறிந்தால் வரும் பதிப்புகளில் கூறுகின்றேன். அடுத்த பதிவு சங்ககால்த்திட்கு முந்திய கரிகாலனை பற்றியதாய் இருக்கும். கரிகாலன் இருவாறு அறியபடுகின்றான் சங்ககாலத்திட்கு முந்தியவன் என்றும் சங்க காலத்தவன் என்றும் இரு கரிகாலர்கள் இனம்காணப்படுகின்றனர்.. விரிவாக பார்க்கலாம் வரும் பதிப்புக்களில்
சோழர்களும் அவர்களின் வரலாறும்-05
போன பகுதியில் சோழர்களில் கரிகால சோழன் பற்றிய குழப்பம் பற்றி
இந்தப்பகுதியில் பார்க்கலாம் எனக் கூறியிருந்தேன் ஆனால் அப்பகுதிக்கும்
இப்பகுதிக்குமான கால இடைவெளி சற்று நீண்டுவிட்டது அதற்காக மன்னிக்கவும்.
மேலும் இதுவரை இதன் முன்னைய பாகங்களை படிக்காதவர்கள் தயவு செய்து வாசித்து
விட்டு தொடரவும். [இதன் முதற் பதிவுக்கு செல்ல சோழர்களும் அவர்களின் வரலாறும்-04 ]
கரிகாலச்சோழன்
இவன் ஒருவனே எனவும் இல்லை இருவர் உள்ளனர் எனவும் வெவ்வேறு கருத்துக்கள் இன்றளவும் உள்ளன. ஆனால் கி.மு முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த கரிகாலன் ஒருவனும் கி.பி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கரிகாலன் ஒருவனும் என மொத்தம் இரண்டு கரிகாலச் சோழர்கள் வாழ்ந்திருக்கலாம் என காவியங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டிருப்பதாக ஒரு சில அறிஞர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் என்னால் முடிந்த வரை தேடியதில் இவ்விரு கரிகாலச் சோழர்கள் பற்றியும் வேறுபடுத்தி அறியுமாறு வேறு ஒரு தகவல்களும் கிடைக்கவில்லை [அறிந்தவர்கள் அறியத்தரவும்]. பொதுவாக கரிகாலச் சோழன் எனும் பெயரால் அறியப்படும் இவனது தந்தை இளம்சேட்சென்னி என்றறியவருகிறது. கரிகாலச் சோழன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அவனது தந்தை இறந்து விட அச்சமயத்தில் நிகழ்ந்த அரசாட்சி சார்பான பிரச்சனைகளால் உண்மைஉரிமைவாரிசான கரிகாலச்சோழனை சிறுவயது முதல் கொண்டே விசமிகள் சிலர் சிறையில் அடைத்துவிட்டனர். அச்சிறையில் இருந்து பெரும் கலகத்தை விளைவித்து தப்பித்த இவனது கால்கள் நெருப்பினால் கருகிப்போனது என்றும் அதனாலேயே இவன் கரிகாலன் எனும் பெயரைப் பெற்றான் என்றும் கூறப்படுகிறது. இவன் சிறையிலிருந்து தப்பித்த இந்த சம்பவத்தை காவியங்களும் புராணங்களும் தாராளமாக புகழ்ந்துள்ளன. மேலும் “கரி” என்றால் “யானை”, “காலன்” என்றால் “எமன்” ஆதலால் இவன் போர்களங்களில் நடந்து கொண்ட வீரதீரத்தை புகழ்ந்து எதிரிகளின் யானைகளுக்கு எமன் எனும் வகைப்பட கரிகாலன் என அழைக்கப்பட்டதாக வாதிடுவோரும் உள்ளனர். இவன் கரிகாற்பெருவளத்தான், பெருவளவன் எனவும் சிறப்புற அழைக்கப்படுகிறான். “வெண்ணிப்பெருவெளி” எனும் இடத்தில் நடந்த போரில் பாண்டியர், சேரர் எனும் இரு சாராரின் படையையும் இவன் தோற்கடித்ததாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இலங்கையிலிருந்து கொண்டுவந்த சிறைக்கைதிகளைக் கொண்டு காவிரியின் இருமருங்கிலும் பெரும் அணையை எடுப்பித்ததாகவும், காவிரிப்பூம்பட்டினத்தை புகழ்பூத்த ஊறணித்துறைமுகமாக மாற்றியமைத்ததாயும், இமயம் வரை படைஎடுத்துச்சென்று வென்று புகழ் கொண்டதுடன் எங்கும் புலிக்கொடி பறக்க வைத்த பெருமையும் இவனையே சாரும் என இலக்கியங்கள் இவனைப்புகழ்வதுடன் வரலாற்று அறிஞர்களும் இவன் இருந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
காஞ்சிபுரம் ஏகம்பெரேஸ்வரர் கோவிலிலுள்ள கரிகாலனின் சிலை
நெடுங்கிள்ளி,நலங்கிள்ளி
கரிகாலச்சோழனுக்குபின்னர் ஆட்சிபீடமேறியவன் நெடுங்கிள்ளி எனும் சோழனாவான். முற்காலசோழர்களில் ஒருவனான இவன் முடிசூடும் போது சோழநாடு நல்ல நிலையில் இருந்ததாயினும் இவன் காலத்தில் வாழ்ந்த நலங்கிள்ளி எனும் சோழமன்னனுக்கும் இவனுக்கும் இடையில் ஆட்சி பற்றிய போட்டிகள் நிலவின. ஆதலால் நெடுங்கிள்ளி உறையூரிலும் நலங்கிள்ளி புகாரிலும் பிரிந்து ஆட்சிநடத்தினர். இவர்களை பின்பற்றிய மக்களும் அவரவரின் பின்னே அணிதிரண்டனர். நலங்கிள்ளி நெடுங்கிள்ளி வசித்த உறையூர் கோட்டையை முற்றுகையிட்டான். பின்னர் கோவூர் கிழார் எனும் புலவரின் சமாதானத்தின் படி இருவரும் சமரசம் ஆனதாக அறியவருகிறது.
கிள்ளிவளவன்
வீரதீரங்களில் சிறந்தவனான இவனை காவியங்கள் செருக்குள்ளவனாக காட்டுவதுடன் இவனும் முற்காலச் சோழர்களுடனேயே உள்ளடக்கப்படுகின்றான்.
கோப்பெருஞ்சோழன்
உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த இவன் நல்ல தமிழ் புலவனாக இனம்காணப்படுவதுடன் அதிதீர வீரனாகவும் இலக்கியங்களால் காட்டப்படுகின்றான். அதுமட்டுமல்லாது இவனது ஆட்சிக்காலத்தில் இவனது பிள்ளைகள் தீய நட்பின் விளைவால் இவன் உயிருடன் இருக்கும் போதே ஆட்சியைக் கைபற்ற முயன்றபோதும் அதை முறியடித்த இவன் தானே முன்வந்து ஆட்சியை அவர்களிடம் கொடுத்துவிட்டு வனாந்தரம் சென்றுவிட்டான் என அறியவருகிறது.
கோச்செங்கணான்
முற்காலச் சோழர்களில் உள்ளடங்கும் இவனை தேவாரங்கள் முதல் கொண்டு வரலாற்று சான்றுகள் வரை அனைத்தும் புகழ்ந்துள்ளதுடன் இவனை பற்றி சற்று மிகைப்படுத்தியும் கூறியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இவன் சிவ பக்தியில் சிறந்தவன் என்றும் சங்ககாலத்துச் சோழரில் கடைசியில் ஆண்டவன் என்றும் கூறப்படுகிறது. சிவனுக்கு 70 அழகிய மாடங்கள் எடுப்பித்ததுடன் வீரதீரத்திலும் சிறந்து விளங்கியவன் .சேரர்களுடன் பெரும் போர் புரிந்து சாதனைகள் பல செய்தவன் என புகழப்படுகின்றான்.
அதுமட்டுமல்ல இவ்வாறு இலக்கியங்களில் புகழப்படும் சோழர்களில் கரிகாற்சோழன், கிள்ளிவளவன், கோப்பெருஞ்சோழன்,கோச்செங்கணான், போன்றோர்கள் முக்கியவானவர்கள் என்பதுடன் இவர்களின் வீரதீரங்களை காவியங்களும் புராணங்களும் சற்று மிகைப்படுத்திக் கூறியிருந்தாலும் இவர்கள் இருந்ததும் சாதித்ததும் உண்மையே என வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இவர்கள் தவிர கன்யாகுமரிக்கல்வெட்டு சகதேவமல்லன் பற்றியும் சாராலச்செப்பேடுகள் வியாழப்பயங்கரன் பற்றியும் குறிப்பிடுகின்றன. மேலும் அன்பில் செப்பேடுகள் குறிப்பிடும் “ஸ்ரீகந்தன்” எனும் சோழனே விசயாலய சோழனின் தந்தையாக கூறப்படும் “குமராங்குசன்” எனவும் வாதிடுவோரும் உள்ளனர். இவர்கள் தவிர ஏராளமான சோழர்களின் வரலாறுகள் ஆங்காங்கே காவியங்களிலும் புராணங்களிலும் கதைகளிலும் கூறப்பட்டாலும் அவர்களின் வரலாறுகளில் தெளிவில்லை.இதுவரை முற்காலச் சோழர்களின் வரலாறுகள் பற்றி முடிந்தவரை விரிவாக பார்த்துள்ளோம். அடுத்த பதிவில் சோழர்களின் இருண்ட காலம் பற்றியும் அதுசம்பந்தமான காரணிகளையும் காணலாம்.